இந்திய கடலோர காவல்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய விமானப்படையின் காணாமல் போன சிறிய ரக விமானத்தை தேடும் பணி 6-வது நாளாக நடைபெற்று வருகிறது.
இதில் 8 கப்பல்கள், 2 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேற்று முதல் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் சிந்துத்வாஜ், கடல் நீருக்கடியில் விமானத்தின் சிக்னல் கிடைத்த இடத்தில் தேடும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமானம் விழுந்ததாக கருதப்படும் இடத்தில் தேசிய தொலை உணர்வு நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் புகைப்படம் எடுக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேடுதலின்போது, படகு பழுதாகி கடலில் தத்தளித்து வந்த 10 மீனவர்கள் மீட்கப்பட்டு, புதுச்சேரி துறைமுகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.