ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் கர்நாடக அரசின் முடிவை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென கர்நாடக அரசு எடுத்திருக்கும் முடிவை வரவேற்கிறேன்.
மேல்முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் 20 நாட்களிலேயே மிக விரைவாக இந்த முடிவை எடுத்த கர்நாடக அரசை பாராட்டுகிறேன்.
விசாரணை நீதிமன்றம் ஜெயலலிதா மற்றும் மூவருக்கு வழங்கிய தண்டனையை உயர் நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்திருக்கிறது.
இத்தகைய இரு வேறுபட்ட தீர்ப்புகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் தான் இறுதியாக நீதி கிடைக்கும். உச்ச நீதிமன்றம் எந்த அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் தீர்ப்பை வழங்கும் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.