தமிழகம்

சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியதாக 5 மாதத்தில் 22,914 வழக்குகள் பதிவு: 374 பேரின் லைசென்ஸ் ரத்து

செய்திப்பிரிவு

மது போதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 5 மாதங்களில் 22,914 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 374 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் இரவில் 54 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. உயர் அதிகாரிகள் இதனை அவ்வப்போது ஆய்வும் செய்கின்றனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் சென்னை நகரில் நடத்தப்பட்ட சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 22,914 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை போதையை அளவிடும் கருவியான ‘பிரீத் அனலைசர்' மூலம் கண்டுபிடித்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவர்களில் 6,221 பேர் காரில் வந்தவர்கள்.

அதிக போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 374 பேரின் ஓட்டுநர் உரிமம் நீதிமன்றம் மூலம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், போதையில் வாகனம் ஓட்டியதாக 2,396 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் உயிரிழப்பு விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 27 சதவீதம் குறைந்துள்ளது.

SCROLL FOR NEXT