தமிழகம்

வறுமை துரத்துவதால் ஏஜென்டுகள் மூலம் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்!- பாலக்காடு ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய சிறுவர், சிறுமியரின் பின்னணி

கா.சு.வேலாயுதன்

கேரள மாநிலம் பாலக்காட்டில் 500-க்கும் மேற்பட்ட வட மாநில சிறுவர் சிறுமியர் மீட்புக்கு கோவையில் சிலர் கொடுத்த தகவல்தான் காரணம் என்கின்றனர் கேரளத்தில் உள்ள குழந்தைகள் நல ஆர்வலர்கள்.

பாலக்காடு ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி மதியம் வந்த பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் வந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்களைப் பிடித்து போலீஸ் விசாரித்ததும், அவர்களில் பலர் டிக்கெட் இல்லாமல் பயணித்ததுடன், சர்ச்சைக்குரிய சில தகவல்களும் தெரிய வந்தன.

பாலக்காடு மாவட்ட ஆட்சியர் ராமச்சந்திரன் இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் இந்தக் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளார். இவர்கள் பாலக்காட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள முட்டிக்குளங்கரை கிராமத்தில் உள்ள ஜோதி நிலையம் என்ற காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். தகுந்த ஆவணங்கள் இல்லாமல் குழந்தைகளை அழைத்து வந்த குற்றத்துக்காக 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் காப்பகங்களில்..

இந்த சிறுவர், சிறுமிகள் நேற்று முன்தினம் இரவே முட்டிக்குளங்கரை ஜோதி காப்பகத்திலிருந்து விடுவிக்கப் பட்டு பாலக்காடு, கோழிக்கோடு, மலம்புழா என பல்வேறு பகுதிகளில் உள்ள சிறார் காப்பகங்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சி.டபிள்யு.சி. (குழந்தைகள் நல அமைப்பு) தலைவர் ஜோக்பால் மற்றும் அதன் உறுப்பினர்கள் குரியகோஸ், கிரேஸ்கோயி, சிஸ்டர் டெஸின் மைனாட்டி ஆகியோர் கூறியதாவது:

பாலக்காடு நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது எங்கள் அமைப்பு. 17 வயது நிறைவடையாத சிறுவர், சிறுமியர் நலனைப் பாதுகாப்பதும் குற்றச் செயல்களிலிருந்து அவர்களை மீட்டு, திருத்தி நல்வாழ்வு அளிப்பதும்தான் எங்கள் பணி. முதல் நாளில் எங்களிடம் 212 சிறார்களையும், 243 சிறுமிகளையும் (மொத்தம் 455) போலீஸார் ஒப்படைத்தனர். அடுத்த நாள் வந்த ரயிலில் வந்ததாக சிறுவர்கள் 123 பேரை ஒப்படைத்தனர். இவர்களில் 156 பேரை அசல் சான்றிதழை கொடுத்து முக்கம் இஸ்லாமிய பள்ளியினர் கோழிக்கோடு அழைத்துச் சென்றுவிட்டனர். 175 சிறுமிகளை மலம்புழாவில் உள்ள பிராவிடன்ஸ் ஹோமில் தங்க வைத்துள்ளோம். 125 சிறுவர்கள் பாலக்காட்டில் உள்ள புழம்கரா காப்பகத்தில் தங்க வைக்க செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளோம்.

புதன்கிழமை காலையில் 44 சிறுவர்கள், 18 சிறுமிகள், 14 சிறு குழந்தைகளை (இவர்கள் 6 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள்) கோழிக்கோட்டில் உள்ள சி.டபிள்யூ.சி காப்பகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். அடுத்தகட்ட போலீஸ் உத்தரவு வரும் வரை பாதுகாப்புடன் கவனித்துக் கொள்வோம் என்றனர்.

வறுமை காரணமா?

தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களிடம் ஏதாவது அறிய முடிந்ததா என்று சி.டபிள்யு.சி அமைப்பினரிடம் கேட்டபோது, இந்தக் குழந்தைகள் பெரும்பான்மையோருக்கு பெற்றோரும் உறவுக்காரர்களும் இருப்பதாகவும், தங்களை பெற்றோர் படிப்பதற்காக அனுப்பியதாகவும் கூறுகிறார்கள். வறுமையில் இருக்கும் பெற்றோர், எப்படியாவது எங்கேயாவது போய் பிள்ளைகள் படித்தால் போதும் என்றே இந்த ஏஜென்டுகள் மூலம் அனுப்பி வைப்பதாகத் தெரிகிறது. தவறான நோக்கத்தில் இவர்கள் அழைத்து வரப்பட்டதாகத் தெரியவில்லை’ என்றனர்.

வழக்கமாக நடப்பதுதான்..

இதுகுறித்து முட்டிக்குளங்கரையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் சிலர் கூறும்போது, 'பாலக்காடு ஸ்டேஷனில் இதுபோல் சிறுவர் சிறுமியர் வந்து இறங்கி கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் போவது இன்று நேற்று நடப்பதல்ல; அங்குள்ள காப்பகங்களில் இவர்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது உட்பட இங்குள்ள போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.

இந்த மீட்பு சம்பவம்கூட சின்னப் பசங்களை ஏஜென்டுகள் அழைத்து வருவதாக கோயம்புத்தூரிலிருந்து யாரோ சில இங்குள்ள ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதிகாரிகளுக்கு தெரிந்த பிறகுதான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT