தமிழகம்

முல்லை பெரியாறில் புதிய அணை: கேரளா கோரிக்கையை ஏற்கக் கூடாது - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

செய்திப்பிரிவு

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசு எந்த ஒரு கோரிக்கை வைத்தாலும் அதை பரிசீலனைக்கே எடுக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக ஆய்வு நடத்த, மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியுள் ளது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அண்மையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச் சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்தி லிங்கம், எடப்பாடி கே.பழனிச் சாமி, பி.பழனியப்பன், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறைச் செயலர் நா.ச.பழனி யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கட்டுமானம், நீரியல் மற்றும் நிலவியல் அடிப்படையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக கேரள அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவும் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை முடிந்துவிட்ட நிலை யில், உச்ச நீதிமன்ற ஆணையை மீறும் வகையில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக்கு கேரள அரசு அனுமதி கோரியுள்ளது. ஆய்வு நடத்த தடை விதிக்கக் கோரியும், கேரள அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர தமிழக அரசுக்கு உள்ள உரிமை குறித்தும் உச்ச நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை ஜூலை மாதத் துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இந்தச் சூழலில், கேரள அரசு தெரிவித்துள்ள திட்டத்தில் உள்ள ஆய்வு வரம்புகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பரிசீலித்துள்ளதாக தெரிகிறது. கேரளாவின் இந்த கோரிக்கைக்கான அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச் சகம் தெரிவித்துள்ளதாக பத்திரிகை தகவல்துறை ஜூன் 4-ம் தேதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், கேரளாவின் கோரிக்கை மற்றும் சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த ஆய்வு வரம்புகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலித்ததே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயலாகும். கேரளாவின் கோரிக் கையை ஆய்வுக்கு எடுக்காமல் திருப்பி அனுப்பியிருக்க வேண் டும். எனவே, தாங்கள் தனிப்பட்ட முறையில் இதில் தலையிட்டு, வருங்காலத்தில் கேரள அரசு இது போன்ற கோரிக்கை வைத்தால், அதை ஆய்வுக்கு எடுக்காமல் சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனே திருப்பி அனுப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT