ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில், சென்னையில் இருந்து இயக்கப் படும் கர்நாடக அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் இருந்து கர்நாட கத்தின் பல பகுதிகளுக்கு இரு மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு, மைசூர், ஷிமோகா, தர்மசாலா, பெல்காம், மங்களூர், மடிக்கேரி உள்ளிட்ட இடங்களுக்கு 51 கர்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கர்நாடக அரசு நேற்று அறிவித்துள்ளது. இதையடுத்து, கர்நாடக அரசுப் பேருந்துகள் கோயம்பேட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தமிழக அரசு பேருந்துகள் கர்நாடகத் துக்கு வழக்கம்போல இயக் கப்படுகின்றன.
இது தொடர்பாக கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்துகளை கோயம்பேடு பணிமனையில் நிறுத்தி வைக்குமாறு எங்கள் தலைமை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், 51 பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளோம். தலைமை நிர்வாகம் அனுமதி அளிக்கும்போது, வழக்கம்போல பேருந்துகளை இயக்குவோம்’’ என்றனர்.