நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதும், அவர் அந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பதும் தமிழ் நாட்டு மக்களாலும், உலகத் தமிழர்களாலும் எவ்வகையிலும் ஏற்று, வரவேற்கப்பட இயலாத ஒன்றாகும்.
ஏற்கெனவே இருந்த மத்திய காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், சர்வதேச தமிழ் அமைப்புகளின் சார்பாகவும் பல முறை இலங்கை அரசின் தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான நடைமுறைகள் குறித்துப் பல முறை எடுத்துச் சொல்லியும், எச்சரிக்கை செய்தும், மத்திய காங்கிரஸ் அரசு அதைக் கிஞ்சிற்றும் காதிலே போட்டுக் கொள்ளாமல், இலங்கையை நட்பு நாடு என்றே தொடர்ந்து கூறி வந்ததின் காரணமாக ஏற்பட்ட எதிர்மறை விளைவினை அனைவரும் அறிவர்.
தமிழின உணர்வு சம்பந்தமான இந்த உண்மையை புதிதாகப் பொறுப்பேற்கும் பா.ஜ.க. அரசு தொடக்க நிலையிலேயே உணர்ந்து கொள்ள முன் வர வேண்டும் என விரும்புகிறேன்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டுமென்று ஒரு காலத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் பேரவையிலே தீர்மானம் கொண்டு
வந்து நிறைவேற்றியவர்களே, தற்போது நல்லவர்கள் போலவோ அல்லது தம்மைத் திருத்திக் கொண்டவர்கள் போலவோ, ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு தங்களின் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா காரசாரமாக விடுத்துள்ள அறிக்கையைப் பார்க்கும்போது, இதே முதல்வர்தான் தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் என்பது மறந்து விடக் கூடியதல்ல.
நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் அந்த நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் இன அழிப்பில் தீவிரமாக இறங்கிய - தமது குடிமக்கள் மீதே போர் தொடுத்த - மனித உரிமைகளைச் சிறிதும் மதிக்காத ஒருவர் இடம் பெற வேண்டுமா என்பதை மத்திய அரசு மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து சிந்தித்து, அந்த முயற்சியைக் கை விட வேண்டுகிறேன்.