செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலால் டிஎஸ்பி தங்கவேலுவை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி ஆம்பூர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆம்பூரை அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் சின்னபையன் செம்மரக் கடத்தல் விவகாரத்தில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வேலூர் அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்த நாகேந் திரன், அவரது மனைவி ஜோதி லட்சுமி கைது செய்யப்பட்டனர். செம்மரக் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலு 3-வது நபராக இந்த வழக்கில் சேர்க்கப் பட்டு வேலூர் சிறை யில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நாகேந்திரன் - ஜோதிலட்சுமியை ஆம்பூர் தாலுகா போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தபோது, டிஎஸ்பி உத்தரவுப்படி நடந்துக் கொண்டதாககூறியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து வேலூர் சிறையில் உள்ள கலால் டிஎஸ்பியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆம்பூர் தாலுகா காவல் ஆய்வாளர் பாபுரவிச்சந்திரன் நேற்று மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, இன்று காலை வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் டிஎஸ்பி ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது.