தமிழகம்

கருணாநிதி பிறந்த நாளையொட்டி 92 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதியின் 92-வது பிறந்த நாளையொட்டி 92 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 9 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலை பகுதியில் 5 மரக்கன்றுகளை நட்டு இந்தத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், ''திமுக தலைவர் கருணாநிதி 92 வயதிலும் மக்களுக்காக அயராது உழைத்து வருகிறார். ஒவ்வொரு நொடியும் மக்களுக்காக சிந்திக்கிறார். சாதி, மதமற்ற சமுதாயம் மலர வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார்.

இடதுசாரிகள் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்த மேற்கு வங்கத்தில்கூட இன்னும் கை ரிக்ஷா உள்ளது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடனேயே கை ரிக்ஷாவுக்கு தடைவிதித்து சமூகநீதிக்கு வித்திட்டவர் கருணாநிதி.

தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்த அவரோடு, தற்போது 5-வது முறையாக பதவியேற்ற ஜெயலலிதாவை ஒப்பிடுகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டால் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் பதவியேற்றவரோடு கருணாநிதியை ஒப்பிடுவதை ஏற்க முடியாது.

கருணாநிதியின் 92-வது பிறந்த நாளையொட்டி திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் 92 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம். இளைஞரணி தொண்டர்கள் 92 லட்சத்தோடு நின்று விடாமல் 1 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT