தமிழகம்

சிங்கப்பூரில் கடலில் குதித்து இளைஞர் தற்கொலை: மனைவி தற்கொலை வழக்கில் தேடப்பட்டவர்

செய்திப்பிரிவு

முத்துப்பேட்டையை அடுத்த குன் னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயபால். இவரது மகள் பிரியதர்ஷினி(25). எம்பிஏ படித்தவர். இவருக்கும் பட்டுக் கோட்டை கரிக்காடு கிராமத் தைச் சேர்ந்த தமிழ்மணிக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடைபெற்றது. சிங்கப்பூரில் கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்மணி, திருமணம் முடிந்த சில நாட்களில் சிங்கப் பூர் திரும்பிவிட்டார். தமிழ்மணி ஏற்கெனவே சத்யா என்ற பெண்ணை மணந்து, 2 குழந்தைகள் உள்ளன என்பது திருமணத்துக்குப் பின்னர் பிரியதர்ஷினிக்குத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பிரியதர்ஷி னியை, மே 1-ம் தேதி தமிழ்மணியின் முதல் மனைவி சத்யா போனில் மிரட்டியதனால் அன்று இரவு பிரியதர்ஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரியதர்ஷினியின் தந்தை எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து, ஏமாற்றி திருமணம் செய்ததாக தமிழ்மணி மற்றும் அவரது தந்தை ஜெயராமன், தாய் ராஜேஸ்வரி ஆகியோர் மீது எடையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெயராமனை கைது செய்து திருச்சி மத்திய சிறையிலடைத்தனர். தமிழ்மணியை சிங்கப்பூரில் இருந்து இந்தியா கொண்டுவர காவல்துறை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்மணி கடந்த 5-ம் தேதி சிங்கப்பூரில் கப்பல் கட்டும் தளத்தில் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டாராம்.

அவரது உடல் விமானம் மூலம் ஜூன் 8-ம் தேதி இரவு திருச்சி கொண்டுவரப்பட்டு, சொந்த ஊரான கரிக்காட்டில் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT