பழனி வியாபாரி கொலை வழக்கில் முன்விரோதத்தில் கஞ்சா வியாபாரி தனது இரண்டாவது மனைவி மூலம் “மிஸ்டு கால்” அழைப்புவிடுத்து வரவழைத்து கொலையை அரங்கேற்றிய சம்பவம், போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பழனி பெரிய ஆவுடை யார் கோயில் அருகே, கடந்த ஞாயிற்றுக்கிழமை பழனி அடிவாரம் வியாபாரி கணேசன் படுகொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி தாலுகா போலீஸார் விசாரணையில் அவரது கைப்பேசிக்கு குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து அடிக்கடி “மிஸ்டு கால்” வந்துள்ளது. அந்த எண்ணுக்கு கணேசன், கொலை நடந்த அன்று தவிர, கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி பேசி வந்துள்ளார். அந்த கைப்பேசியை வைத்திருந்த பழனி கரிகாரன் புதூரைச் சேர்ந்த மகாலட்சுமியை (22) பிடித்து போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். இதில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.
கணேசனுக்கும், கரிகாரன்பு தூரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி நல்லுச்சாமிக்கும் (38) முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் நல்லுச்சாமி கணே சனைக் கொலைசெய்ய புது வியூகம் வகுத்துள்ளார்.
அதன்படி, தனது இரண்டாவது மனைவி மகாலட்சுமி மூலம் கணேசனின் கைப்பேசிக்கு மிஸ்டு காலில் அழைக்கச் செய்துள்ளார்.
உடனே அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட கணேசன், உங்கள் கைப்பேசியில் இருந்து அழைப்பு வந்துள்ளது எனக் கூறியுள்ளார். அதற்கு மகாலட்சுமி, தெரியலையே எனப் பேச்சை இழுத்துள்ளார். சபலமடைந்த கணேசனுக்கு, மகாலட்சுமி இதுபோல தொடர்ந்து மிஸ்டுகால் மூலம் அழைத்து ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நேரில் சந்திக்கலாம் எனக் கூறி கணேசனை கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே வரச் சொல்லியுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கணேசனை மகாலட்சுமி, பெரிய ஆவுடையார் கோயில் அருகே ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு காத்திருந்த நல்லுச்சாமி, அவரது நண்பர்கள், அய்யாவு, குருசாமி ஆகியோர் கணேசனை வெட்டிக் கொலை செய்தனர்.
இச்சம்பவத்தில் நல்லுச்சாமி, குருசாமி, மிஸ்டு கால் கொடுத்து வரவழைத்த மகாலட்சுமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
தலைமறைவான அய்யாவுவைத் தேடி வருகின் றனர்.