தமிழகம்

மெட்ரோ ரயில் பணிகள் காரணமா? - தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் அதிர்வால் ஊழியர்கள் அச்சம்

செய்திப்பிரிவு

அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் அதிர்வு ஏற்பட்டது.

அண்ணாசாலையில் எல்ஐசி அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 7 மாடி கட்டிடம் உள்ளது. அதில் 3 தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. 400-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் இக்கட்டிடத்தில் லேசான அதிர்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டிடத்திலிருந்த ஊழியர்கள் பதற்றத்துடன் வெளியே ஓடிவந்தனர். அருகில் இருந்த மற்ற கட்டிடங்களில் எந்தவித அதிர்வும் ஏற்படாததால் அவர்கள் குழப்பத்தில் இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் அவர்களிடம் வந்து பேசினர். மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு திரும்பினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று மாலை வரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்பட்டன. கட்டிட ஆய்வு கருவிகளைக் கொண்டு முழுமையாக ஆய்வு நடத்திய பிறகு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டன.

SCROLL FOR NEXT