மணல் குவாரிக்கு எதிராக வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
காவேரிப்பாக்கம் அடுத்துள்ள களத்தூர் - சங்கரன்பாடியில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று 3-வது நாளாக களத்தூர் பஜனை கோயிலில் அமர்ந்து, அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மணல் குவாரி திட்டத்தை கைவிடுவதாக மாவட்ட நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும்வரை போராட்டம் தொடரும் என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
மணல் குவாரிக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும் காவல் துறையினரும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காவல் ஆய்வாளர் காண்டீபனுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மணல் குவாரி நடத்துவோருக்கு ஆதரவாகவும், அதை எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும் காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் என வலியறுத்தி, ‘புதிய ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்பு சார்பில் களத்தூர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மணல் குவாரி தரப்பினரிடம் பணம் வாங்கிக்கொண்டு காவல் துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மணல் குவாரிக்கு எதிராக வீட்டை விட்டு வெளியேறி, கோயிலில் அமர்ந்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக கட்சி சார்பில், விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் இன்று களத்தூர் வந்து, போராட்டக்காரர்களிடம் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.