திருப்போரூர் அடுத்த காயார் கிராமப் பகுதியில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை தென் சென்னை பகுதிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கயத்தாறிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் துணை மின்நிலையம் வரை உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், சிறுசேரியில் உள்ள சிப்காட் பகுதியின் மின்தேவை க்காக, கலிவந்தப்பட்டு மின்நிலை யத்திலிருந்து காயார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் வழியாக 21 மின்கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காயார் பகுதியின் விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்கும் நிலை உள்ளது.
இந்த மின்கோபுரங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப் படுவதாக கூறி மோகன்ராம் என்பவர், பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கப் பட்டது. கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸ் துணை யோடு பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், மின்கோபு ரங்கள் அமைய உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன், ‘உயரழுத்த மின் கோபுரங்கள்அமையும் வழித் தடத்துக்கு, அரசிடம் முறையாக அனுமதி பெற்றதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை’ எனக்கூறி, பணிகளை தொடர இடைக்கால தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனால், காயார் கிராமத்தில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது: வழித்தடத்துக்கு அனுமதியில்லாத நிலையில், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப் பதாலும், மாவட்ட ஆட்சியர் மூலம் கிராம மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படாத தாலும் நீதிபதி இடைக்கால தடை விதித்துள்ளார். தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.