தமிழகம்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்துக்கு தடை விதிக்கவில்லை: ஐ.ஐ.டி. இயக்குநர் புதிய விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை ஐஐடியில் இயங்கி வந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகி வரும் நிலையில், ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி சம்பந்தப்பட்ட மாணவர் அமைப்பிடம் விளக்கம் மட்டுமே கோரப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டம் என்ற பெயரில் ஒரு குழு செயல்பட்டது. அந்த குழுவின் உறுப்பினர்கள் மத்திய அரசு, பிரதமர் மோடியை விமர்சித்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர் அமைப்பை சென்னை ஐஐடி நிர்வாகம் அண்மையில் தடை செய்தது. இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், தற்சமயம் வெளிநாட்டில் உள்ள சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி இவ்விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் எழுப்பிய கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பியுள்ளார்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையில் "மோடி அரசு இந்துத்வா கொள்கைகளை முன்னெடுத்து செல்கிறது, தொழிலாளர் நலச் சட்டங்கள், 100 சதவீத அந்நிய முத லீடுக்கு அனுமதி உள்ளிட்ட முடிவு களால் கார்ப்பரேட் நிறு வனங்கள் நாட்டை சூறையாட வழி வகுக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது என்பது புகார்.

இந்த சுற்றறிக்கை குறித்து சில மாணவர்கள் மத்திய மனித வளத் துறையிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து ஐஐடி நிர்வாகத்திடம் மத்திய மனித வளத் துறை விளக்கம் கேட்டது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பாஸ்கர ராமமூர்த்தி தனது மின்னஞ்சலில், "அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பாக பெயர் தெரிவிக்கப்படாத சிலர் அனுப்பிய புகாரின் அடிப்படையில் நாங்கள் செயல்படவில்லை.

அந்தப் புகார் எங்களுக்கு வந்தபோது, அம்பேத்கர் - பெரியா வாசகர் வட்டம் சார்பில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டதும். அதில் மாணவர் அமைப்புகள் உருவாக்கிய விதிமுறைகள் மீறப்பட்டிருந்ததும் எங்களுக்குத் தெரியவந்தது.

இதனையடுத்து அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்துக்கு மாணவர் அமைப்புகளுக்கான விதிமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை என விளக்கம் கோரப்பட்டது. அந்த விளக்கத்தை மாணவர்கள் அமைப்பு வாரியம் பரிசீலிக்கும் என்பதற்காகவே விளக்கம் கோரப்பட்டது.

ஆனால், அந்த மின்னஞ்சலை தடை உத்தரவு மின்னஞ்சல் என ஏ.பி.எஸ்.சி. அமைப்பினர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். நாங்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், கடந்த 22-ம் தேதி அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்துக்கு ஐஐடி டீன் அனுப்பிய மின்னஞ்சலில், "உங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை நீங்கள் தவறாக பயன்படுத்தியதன் காரணமாக உங்களது மாணவர் அமைப்புக்கான அங்கீகாரம் ரத்தாகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளையில் உங்கள் நிலைப்பாட்டை எந்த நேரத்திலும் நீங்கள் விலக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT