தமிழகம்

அமெரிக்காவில் 7-வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு

செய்திப்பிரிவு

பன்னாட்டுத் தமிழுறவு மன்றமும், உலகத் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து உலகத் தமிழர் 7-ம் ஒற்றுமை மாநாட்டினை அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகரில் நடத்திட உள்ளன.

இம்மாநாடு குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பன்னாட்டு தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் வா.மு.சேதுராமன் கூறியதாவது:

உலகெங்கிலுமுள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் இணைப்புப் பாலமாக தொடங்கப்பட்டதுதான் பன்னாட்டு தமிழுறவு மன்றம். இதுவரை சென்னை, பெர்லின், பாங்காக், கோலாலம்பூர் உள்ளிட்ட நகரங்களில் 6 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தமிழ் மொழியின் சிறப்பினை உலகறிய செய்வதோடு, உலகில் 92 நாடுகளுக்கு மேல் வாழ்ந்துவரும் தமிழ் அறிஞர்களை ஒன்றுபடுத்துகிற பணியையும் செய்து வருகிறோம்.

தமிழ் நூல்களையும், கலாச்சாரப் பண்பாட்டுத் தொடர்புக்குரிய பொருட்களையும் உலக அளவில் பரிமாறிக் கொள்கிறோம்.

வரும் ஜூலை 25, 26 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தென்னாப்பிரிக்கா தமிழ்ப் புரவலர் மிக்கிசெட்டி, வாஷிங்டன் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் சான் பெனடிக்ட், மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டான்சிறி டத்தோ குமரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

ஆய்வரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற உள்ளன. மாநாட்டில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்துகொள் கிறார்கள் என்றார்.

SCROLL FOR NEXT