சென்னையில் கொலை செய்து பாளையங்கோட்டையில் புதைக் கப்பட்ட நடிகர் ரெனால்ட் பீட்டர் பிரின்ஸ் உடல் திங்கள்கிழமை தோண்டியெடுக்கப்பட்டு அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் பரப்பாடி இளங்குளம் பகுதியை சேர்ந்த சூசைமரியான் மகன் ரெனால்டு பீட்டர் பிரின்ஸ் (36). சென்னை மதுரவாயலில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த இவரை நடிகை சுருதி சந்திரலேகா உள்ளிட்டோர் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தனர்.
உடலை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆசீர்வாதம் நகரில் புதைத்தனர்.
இது தொடர்பாக பாளையங் கோட்டை போலீஸார், ஆனஸ்ட் ராஜ் (26), சாந்திநகரை சேர்ந்த காந்திமதிநாதன் (32), ரபீக் உஸ்மான் (34) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பீட்டர் பிரின்ஸ் புதைக்கப்பட்ட இடத்தை சனிக்கிழமை அடையாளம் காட்டினர்.
இதையடுத்து திங்கள்கிழமை பிற்பகல் புல்டோசர் உதவியுடன் பீட்டர் பிரின்ஸின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. பாளையங்கோட்டை வட்டாட்சியர் சொர்ண கோமதிநாயகம், டாக்டர் செல்வமுருகன், காவல்துறை உதவி ஆணையர் மாதவன் முன்னிலையில் உடலின் பாகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
அவை டி.என்.ஏ. உடற்கூறு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பின் பீட்டர் பிரின்ஸின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.