அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்துவதற்கு பதிலாக, தமிழ் வழியில் படித்தவர் களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 80 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என தமிழக தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக தமிழா சிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் நீ.இளங்கோ கூறியதாவது: இப்போது அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை புகுத்திக் கொண்டி ருக்கிறார்கள். ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தூண்டப்படுகிறார்கள். இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வியே இல்லாமல் போய்விடும்.
ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்விதான் என்பதில் கர்நாடக அரசு உறுதியுடன் உள் ளது. ஆனால், இங்கு தாய்மொழி இருட்டடிப்பு செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமையை போதிப்பதற்கு ஆறு மாதங்கள் போதுமானது. இதற்காக அடிப்படையிலிருந்தே ஆங்கில வழியில் படிக்க வேண்டிய அவசியமில்லை.
சமீபத்திய 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 773 பேர் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தனர். இவர்கள் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தா லும், தமிழ் வழியில் படித்தவர்கள் 23 பேர் மட்டுமே. முதல் 3 இடங் களைப் பிடித்த 19 அரசுப் பள்ளி மாணவர்களிலேகூட 5 பேரே தமிழ் வழியில் படித்தவர்கள்.
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்குப் பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேர 80 சதவீத இட ஒதுக்கீடும், அரசு வேலைவாய்ப்புகளில் 80 சதவீத இட ஒதுக்கீடும் அளித்தாலே மக்களுக்கு மெட்ரிக் பள்ளி மோகம் குறைந்துவிடும்.
தமிழக அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக தமிழாசிரியர் கழகத்தின் கோரிக்கை என்றார்.