கேரள மாநிலத்தில் மீன்பிடி தடை காலம் தொடர்வதாலும், முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாலும் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் 800-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் தினமும் சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) மூலம் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முட்டையின் தேவையை பொறுத்து அதன் விலை நிர்ணயம் அமையும்.
கடந்த மே இறுதியில் 340 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து கடந்த இரு வாரங்களில் 62 காசுகள் உயர்ந்துள்ளன. நேற்றைய நிலவரப்படி நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 402 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சில்லரை விற்பனைக் கடைகளில் 450 காசு முதல் 500 காசுகள் வரை முட்டை விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தில் நீடிக்கும் மீன்பிடி தடைகாலம் மற்றும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சத்துணவு திட்டத்துக்கு உள்ளிட்ட காரணங்களால் முட்டைக்கான தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த விலை உயர்வால் ஓட்டல் உள்ளிட்ட உணவு விடுதிகளிலும் முட்டை மூலம் தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது என்பதால், விலையேற்றம் இறைச்சி நுகர்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.