ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் பாதுகாப்புப் பணிக்காக 10 கம்பெனி துணை ராணுவப்படை வரவழைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக எல்லை பாதுகாப்புப் படை-4, மத்திய ரிசர்வ் படை-2, இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ்-4 என 10 கம்பெனிகள் துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
இன்று முதல்..
இவர்களில் எல்லை பாது காப்புப் படை-4 மற்றும் மத்திய ரிசர்வ் படை-1 ஆகிய 5 கம்பெனிகள் 18-ம் தேதி (இன்று) முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மீதமுள்ள 5 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரும் 23-ம் தேதி முதல் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
தேர்தல் முறைகேடு புகார்களில் இதுவரை போஸ்டர்கள், பேனர்கள் தொடர்பாக 2,569 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 86 பிடி வாரண்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.