தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு புத்துயிரூட்ட வலியுறுத்தி வரும் 22-ம் தேது சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், ஊழலை ஒழிக்கவும் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தகவல் ஆணையம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. ஊழலை ஒழிக்க உருவாக்கப்பட்ட இந்த அமைப்பிலேயே ஊழல் பெருகிவிட்டதுடன், வெளிப்படைத் தன்மையும் காணாமல் போய்விட்டது.
தமிழக அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களும் மோசடிகளும் வெளியுலகுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, திட்டமிட்டு தமிழ்நாடு தகவல் ஆணையம் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தலைமை தகவல் ஆணையர், 10 தகவல் ஆணையர்கள் என 11 ஆணையர்களைக் கொண்ட அமைப்பாக திகழவேண்டிய தமிழ்நாடு தகவல் ஆணையத்தில், தற்போது 4 ஆணையர்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்படுகின்றன.
இவ்வாறு தேங்கிக் கிடக்கும் மேல்முறையீட்டு மனுக்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டிவிட்ட போதிலும், முடங்கிக் கிடக்கும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற அக்கறை அரசுக்கு இல்லை.
தகவல் ஆணையம் திட்டமிட்டு முடக்கப்படுவதற்கு மற்றொரு காரணம் முதலமைச்சரின் தன்முனைப்பு தான் என்று கூறப்படுகிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி மாநில தலைமை தகவல் ஆணையர், தகவல் ஆணையர்கள் ஆகியோரை முதலமைச்சர், முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட ஓர் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழுதான் நியமிக்க வேண்டும்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவரை நேருக்கு நேர் சந்திக்க விரும்பாத முதலமைச்சர், தகவல் ஆணையர்கள் தேர்வுக் குழுவைக் கூட்ட மறுப்பதாகவும், அதனால் தான் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக ஓர் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக அமைப்புகளின் செயல்பாட்டுக்கு தனி மனித விருப்பு - வெறுப்புகள் தடையாக இருப்பதை அனுமதிக்க முடியாது. விருப்பு - வெறுப்புகளை மறந்து தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் தேர்வுக் குழுவை உடனடியாகக் கூட்டி, புதிய தலைமை தகவல் ஆணையரையும், தகவல் ஆணையர்களையும் நியமிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 22.06.2015 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னையில் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கவுள்ளேன்.
தமிழ்நாடு தகவல் ஆணையம் செயல்படாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. அரசு நிர்வாகத்தில் நேர்மையையும், வெளிப்படைத் தன்மையையும் ஏற்படுத்த வேண்டுமானால், வலுவான தகவல் ஆணையம் மிகவும் அவசியமாகும்.
தமிழக நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படவுள்ள இந்தப் போராட்டத்தில், தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள், சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.