தமிழகம்

ஆர்.கே.நகர் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: ஜெயலலிதா, மகேந்திரன் உட்பட 28 பேர் போட்டி - வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளி யிடப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உட்பட 28 பேர் களத்தில் உள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை தொகு திக்கு வரும் 27-ம் தேதி இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற் கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி முடிவடைந்தது. முதல்வர் ஜெயலலிதா (அதிமுக), சி.மகேந்திரன் (இந்திய கம்யூ னிஸ்ட்), டி.அப்துல் ரகீம் (இந்திய தேசிய லீக்), வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் (தமிழ் மாநில கட்சி), டிராபிக் ராமசாமி (சுயேச்சை) உட்பட 50 பேர் மனு தாக்கல் செய்தனர்.

மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 11-ம் தேதி நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர் ராஜு நாராயணசாமி முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். இதில் முதல்வர் ஜெயலலிதா, சி.மகேந்திரன், டிராபிக் ராமசாமி, ஆர்.சி.பால்கனராஜ் உள்ளிட்ட 32 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. சமூக ஆர்வலர் சசிபெருமாள் உட்பட 18 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மனுக்களை வாபஸ் பெற நேற்று பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளான நேற்று பால்கனகராஜ், ஜி.சண்முகம், எம்.சந்திரமோகன், எஸ்.சுப்பிர மணியன் (சுயேச்சைகள்) ஆகிய 4 பேரும் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டார். ஜெயலலிதா உட்பட மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் விவரம்:

ஜெ.ஜெயலலிதா (அதிமுக), சி.மகேந்திரன் (இந்திய கம்யூ னிஸ்ட்), ஆர்.ஆபிரகாம் ராஜ்மோகன் (இந்திய மக்கள் கட்சி - மதசார்பற்றது), எம்.சுபாஷ் பாபு (அன்பு உதயம் கட்சி), டி.பால்ராஜ் (மக்கள் மாநாடு கட்சி), யு.கே.மணிமாறன் (தமிழ் மாநில திராவிட முன்னேற்றக் கழகம்), ஜெ.மோகன்ராஜ் (ஜெபமணி ஜனதா) மற்றும் சுயேச்சை களாக டிராபிக் ராமசாமி, எம்.அகமது ஷாஜகான், ஜெ.அப்துல் ரகீம், இ.ராமதாஸ், பி.குமார சாமி, எம்.கோபி, வி.துரைவேல், யு.நாகூர் மீரான் பீர் முகமது, ஏ.நூர் முகமது, கே.பத்மராஜன், பி.பிரகாஷ், பி.பொன்ராஜ், சி.மகராஜன், பி.மாரிமுத்து, எம்.எல்.ரவி, எம்.வசந்தகுமார், ஏ.வெங்கடேஷ், இ.வேணு கோபால், ஆர்.ஜெயகுமார், ஜெ.ஜெயகுமார், பி.என்.ராமச் சந்திரன் ஆகியோர் போட்டியிடு கின்றனர்.

இந்த இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு தொகுதியில் 16 வேட்பா ளர்களுக்கு மேல் போட்டியிட்டால் தேர்தலில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டி வரும். தற்போது ஆர்.கே.நகரில் 28 வேட்பாளர்கள் போட்டியிடு வதால் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். முதல் இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயரும், 2-வது இயந்திரத்தில் மீதமுள்ள 12 வேட்பாளர்களின் பெயரும் இடம்பெறும். யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை பதிவு செய்வதற்கான நோட்டா பட்டன் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொது பார்வையாளர் மாற்றம்

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பொது பார்வையாளராக கேரளத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜு நாராயணசாமி, செலவின பார்வையாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி மஞ்சித்சிங் ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்தது. அவர்கள், தொகுதியில் முகாமிட்டு பணிகளை கவனித்து வந்தனர்.

இந்நிலையில், தேர்தல் பொது பார்வையாளர் ராஜு நாராயணசாமி நேற்று மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஜோதி கலஷ், புதிய தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொது பார்வையாளரை 94450 71056, 044 2851 5342 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், தினமும் காலை 11 முதல் 12 மணிக்குள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள 4-வது மண்டல அலுவலகத்தில் நேரில் சந்தித்தும் வேட்பாளர்கள், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். சென்னை ரிப்பன் கட்டிடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1800-4257012 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் புகார்களை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT