தமிழகம்

தமிழக தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை யைத் தீர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையில் இருந்து ஞாயிற் றுக்கிழமை காலை சென்னை வந்த பொன்.ராதாகிருஷ்ணன், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

மோடி அலை காரணமாக பாஜக வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத் துள்ளது. ஆனால், தேர்தலில் பண பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் நடந்து கொண்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும். அதேபோல இலங்கைத் தமிழர் பிரச்சினையும் தீர்க்கப்படும். நதிநீர் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இருந்து யாருக்கு, மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்பதை மோடி முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘மத்தியில் பாஜக ஆட்சி அமைய வேண்டும். மோடி பிரதமர் ஆக வேண்டும் என நினைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். பாஜகவுக்கு வாக்களித்த நாட்டு மக்களுக்கும், கன்னியாகுமரி தொகுதியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT