ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. மொத்தம் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் கடந்த மே 17-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி முடிவடைந்தது. இங்கு அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட சுயேச்சைகள் என மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக, தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சி றுத்தைகள், தமாகா தேர்தலை புறக்கணித்தன.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. ஆர்.கே. நகர் தொகுதி முழுவதும் 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதற்றமானதாக கண்டறியப்பட்ட 22 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வெயில் காரணமாக காலை 7 மணிக்கே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாக்குப்பதிவு தொடங்கியபோது சில இடங்களில் மட்டும் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.
சில இடங்களில் மின்இணைப்பு பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டது. அதன்பின் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. ஆர்.கே.நகரில் மொத்தம் 2,43,301 வாக்காளர்கள் உள்ளனர்.
காலையில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். காலை 10 மணிக்கு 13 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பகல்12 மணிக்கு 35.5 சதவீதம், பிற்பகல் 2 மணிக்கு 53.1 சதவீதம், மாலை 4 மணிக்கு 63.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
அரசு கேபிளில் ஒளிபரப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. 5 மணிக்குள்ளாக வந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு முடிந்ததும் நிருபர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
ஆர்.கே.நகரில் 230 வாக்குப்பதிவு மையங்களிலும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 74 சதவீத ஆண்களும், 74.8 சதவீத பெண்களும் வாக்களித்துள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை 5 மணிக்குள் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். எனவே, வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகரிக்கக்கூடும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கை
30-ம் தேதி காலை 8 மணிக்கு ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அன்று மதியத்துக்குள் முடிவு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால் சென்னை மெட்ரோ ரயில்சேவை 29-ம் தேதி தொடங்கப்படுமா என்று சந்தீப் சக்சேனாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘வாக்குப்பதிவு நிலவரம் குறித்து மட்டுமே பதிலளிக்க வந்தேன். மெட்ரோ ரயில் குறித்து தற்போது எதுவும் கூறமுடியாது’’ என்றார்.