சொகுசு கார் இறக்குமதி வரி ஏய்ப்பு தொடர்பாக கைது செய்யப் பட்ட சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமான முறையில் ஆடம்பர கார்களை இறக்குமதி செய்து, பெருமளவில் வரிஏய்ப்பு செய்ததாகக் கூறி அலெக்ஸ் சி.ஜோசப் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார்களை வாங்கியதாக பலரை இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் சேர்த்துள்ளனர்.
இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், திங்கள்கிழமை இரவு சென்னையில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு கொண்டு சென்று ஆஜர்படுத்தினர். அவரை ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைக்கவும் செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக வெங்கடாசலம் கூறியதால், மருத்துவ சிகிச்சைக்காக அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வெங்கடாசலம் மனு தாக்கல் செய்துள்ளார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தன்னை ஜாமீனில் விடுவிப்பதால் இந்த வழக்கின் புலன் விசாரணை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிலளிக்க தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கோரினர். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) நீதிபதி ஒத்தி வைத்தார்.
மேலும், வெங்கடாசலத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி சி.பி.ஐ. அதிகாரிகள் சார்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
இதற்கிடையே, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெங்கடாசலத்தின் நீதிமன்றக் காவலை மே 19ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். ஸ்டான்லி மருத்துவமனைக்கு செவ்வாயன்று நேரில் சென்ற நீதிபதி, இந்த காவல் நீட்டிப்பு உத்தரவைப் பிறப்பித்தார்