இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்புக் கூட்டம், ஜெனீவாவில் 24-ம் தேதி (நாளை) நடக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29-வது கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் இணை கூட்டமாக இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்புக் கூட்டத்தை, என் னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு நடத்துகிறது. வரும் 24-ம் தேதி (நாளை) மாலை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அரங்கம் எண் 22-ல் இந்த சிறப்புக்கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்துக்கு இங்கிலாந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினரும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவருமான லீ ஸ்காட் தலைமையேற்கிறார். சர்வ தேச மனித உரிமைகள் சட்ட வல்லு நரும், இங்கிலாந்து வழக்கறிஞர் பேரவையின் மனித உரிமைகள் குழு தலைவருமான ஜெனின் கிறிஸ்டி பிரிமிலோ, தமிழகத்தில் இருந்து வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேர வைத் தலைவர் க.பாலு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்தக் கூட்டத்தை பசுமைத் தாயகம், பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்து கின்றன. பசுமைத் தாயகம் பொதுச்செயலாளர் இரா.அருள் மற்றும் பன்னாட்டு மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கலந்துகொள் கின்றனர். ஐ.நா. அவையின் சிறப்பு ஆலோசனை அமைப்பாக பசுமைத் தாயகம் அமைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரின் இணைக் கூட்டத்தை பசுமைத் தாயகம் நடத்துகிறது.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித் துள்ளார்.
வழக்கறிஞர் பாலு விளக்கம்
வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர் க.பாலு, இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இலங்கையில் நடந்த போரின் போது வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலித்தேவன், நடேசன் போன்ற ஈழப் போராளிகள், அப்பாவித் தமிழர்கள் உள்ளிட்ட 18 ஆயிரம் பேர் நிலை என்ன? அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? என் பதைச் சொல்ல இலங்கை அரசு மறுக்கிறது. இதுபற்றி ஐ.நா. மன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க இருக்கிறோம். இதை உலக நாடுகள் கவனத்துக்கு கொண்டுவர இருக்கிறோம்.
போரின்போது போராளிகள் தானாக முன்வந்து சரணடைந்தால் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற சர்வதேச விதிகளை இலங்கை அரசு மீறியுள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணை யத்திடம் வலியுறுத்த இருக்கிறோம்.
இவ்வாறு பாலு தெரிவித்தார்.