தமிழகம்

அடுத்தடுத்து வெடிகுண்டு புரளி: சென்னை போலீஸ் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை தனியார் வணிக வளாகத்திற்கு இன்று காலை விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

தகவல் அறிந்தவுடன் வணிக வளாகத்தில் போலீஸார் குவிந்தனர். உடனடியாக வணிக வளாகத்தில் இருந்து பொதுமக்களும், ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். வணிக வளாகம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதேபோல் கல்வி நிலையம் ஒன்றிலும், புறநகர் ரயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இவற்றையும் புரளி என காவல்துறை தரப்பு தெரிவித்தது.

காவல்துறை ஆணையர் எச்சரிக்கை:

இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "இது போன்ற வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வணிக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்" என்றார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒரு பெண் பலியானார். 14 பேர் காயமடைந்தனர்.

SCROLL FOR NEXT