கரூர் அமராவதி ஆற்றில், கரூர்- திருமாநிலையூரை இணைக்கும் பழைய பாலம் இன்றுடன் (ஜூன் 19) 91 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது.
கரூர் நகருக்கு தெற்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து வருபவர்கள் அமராவதி ஆற்றைக் கடந்துதான் நகருக்குள் வரமுடியும். இப்பாலம் கட்டப்படுவதற்கு முன்புவரை அமராவதி ஆற்றில் இறங்கி மக்கள் கரூருக்கு வந்துகொண்டிருந்தனர். இதற்காக அமராவதி ஆற்றில் ஆழம் குறைவான பகுதிகளில் அடையாளமிடப்பட்டிருந்தது.
96 ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித் துறை மூலம் அமராவதி (பழைய) பாலத்துக்கு 1919-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி திவான் பகதூர் பி.ராஜகோபால ஆச்சாரியார் அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகள் கழித்து 1924-ல் ஜூன் 20-ம் தேதி திருச்சிராப்பள்ளி ஜில்லா போர்டு தலைவர் தேசிகாச்சாரி பெயர் சூட்டப்பட்ட பாலம், அப்போதைய சென்னை கவர்னர் விஸ்கவுன்ட் கோஸ்சென் ஹாக்ஹர்ஸ்ட்டால் திறந்து வைக்கப்பட்டது.
1977-ம் ஆண்டு அமராவதி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தாங்கிய இப்பாலம், ஆண்டுகள் பல ஆனதால் வலுவிழந்தது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் பாலத்தில் கனரக வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.
இதனால் இப்பாலத்தின் மேற்கு பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அமராவதி புதிய பாலம் இடிந்தபோதும், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் புதிய பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் பழைய பாலம்தான் போக்குவரத்துக்கு (கனரக வாகனங்கள் நீங்கலாக) உதவியது.
4 சக்கர வாகனங்கள் செல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டநிலையில், நடந்து செல்பவர்கள், இரு சக்கர, 3 சக்கர வாகன ஓட்டிகள் இப்பாலத்தை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர்.
இடிக்கப்பட்டுவிட்ட பசுபதிபாளையம் தரைப்பாலம், புறவழிச்சாலையில் இரு பாலங்கள், பழைய பாலத்தின் மேற்கில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம், பசுபதிபாளையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய உயர்நிலை பாலம் என பல பாலங்கள் வந்துவிட்டபோதும் கரூர் அமராவதி ஆற்றில் முதலில் கட்டப்பட்ட பாலம் இதுதான்.
கரூர் மக்களோடும், கரூர் வரலாற்றோடும் பின்னிப்பிணைந்து, பசுமையான நினைவுகளை தாங்கிய இப்பாலம் இன்று (ஜூன் 19) 91 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது.