சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து ஒரு விமானம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சுற்றுலா விசாவில் துபாய் சென்று திரும்பி வந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அஷ்ரப் (29) என்பவரின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரது கைப்பையை சோதனை செய்தபோது, அதில் ஒரு கிலோ மதிப்புள்ள தங்கக்கட்டிகள் கருப்பு பெயின்ட் அடித்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் உள்ளாடைகளுக்குள் 2 கிலோ தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர் கூலிக்காக தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.