தமிழகம்

விபத்தில் உயிர் தப்பிய நாய் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்: தருமபுரி அருகே பரவசம்

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை அடுத்த கீழ்தும்பலஹள்ளியை சேர்ந்த விவசாயி தங்கவேல் (48). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாயை, மணி என பெயரிட்டு வளர்த்தார்.

தினமும் காலை மற்றும் மாலையில் பாலை கறந்து, தும்பலஅள்ளியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு எடுத்து செல்லும் போது, மணியையும் உடன் அழைத்து செல்வது வழக்கம். இதனை தொடர்ந்து மணி மூலம் பாலை, தும்பலஹள்ளிக்கு கொடுத்து அனுப்ப முடிவு செய்த தங்கவேல், அதற்கான இரு சக்கர வண்டியை தயார் செய்தார். காலை, மாலையில் தலா 10 லிட்டர் வீதம் தினந்தோறும் 20 லிட்டர் பாலை கீழ்தும்பலஹள்ளியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள தும்பலஹள்ளிக்கு கொடுத்து அனுப்பி வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வாகனம் மோதியதில், மணிக்கு கால் எலும்பு முறிந்தது. தருமபுரி கால்நடை மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மணி குணம் அடைந்ததும், கீழ்தும்பலஹள்ளியில் மாரியம்மன் கோயிலுக்கு, மணி மூலமாக மாவிளக்கு ஊர்வலம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக தங்கவேல் குடும்பத்தினர் வேண்டினர்.

தற்போது மணி குணமடைந்ததை தொடர்ந்து, நேற்று தங்கவேல் குடும்பத்தினர் மாரியம்மன் கோயில் விழாவில் மணி, பால் கேன்கள் எடுத்து சென்ற வண்டி மூலம், பழம் மற்றும் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து சென்று சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

SCROLL FOR NEXT