தமிழகம்

32,184 மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ஜூன் 15-ம் தேதி தரவரிசைப் பட்டியல் - முதல்கட்ட கலந்தாய்வு 19-ம் தேதி தொடங்குகிறது

செய்திப்பிரிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு வி்ண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று ஆன் லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தரவரிசைப் பட்டி யல் வரும் 15-ம் தேதி வெளியிடப் படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு 19-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரவும், அதேபோல் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பிடிஎஸ் படிப்பில் சேரவும் 32 ஆயிரத்து 184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கணினி மூலம் அனைத்து மாணவ-மாணவி களுக்கும் ரேண்டம் எண்ணை ஒதுக் கீடு செய்தார். மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தமிழக சுகாதாரத்துறையின் இணையதளத்தில் (www.tnhealth.org) பிளஸ் 2 பதிவு எண் மற்றும் பிறந்த தேதி அல்லது எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்களுக்கான ரேண்டம் எண்ணை அறிந்துகொள்ளலாம்.

மாணவர்களுக்கு ரேண்டம் எண்ணை ஆன்லைனில் ஒதுக்கீடு செய்த பின்னர் மருத்துவக் கல்வி இயக்குர் கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:

ரேண்டம் எண் ஒதுக்கீட்டை தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் உத்தேசமாக ஜூன் 15-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படும். பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மதிப்பீட் டுக்கு விண்ணப்பித்த மாணவர் களின் திருத்தப்பட்ட மதிப்பெண் பட் டியலை அரசு தேர்வுத்துறையிட மிருந்து பெற வேண்டியுள்ளது.

முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 19-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும். இந்த முறை சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் (பிளாக்-ஏ) கலந்தாய்வு நடத்தப் படும். விசாலமான இடவசதி இருப் பதால் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு இங்கு கலந் தாய்வு நடத்துகிறோம்.

இந்த ஆண்டு புதிதாக மருத்துவ கவுன்சில் அனுமதி கிடைக்கப் பெற்ற சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து மொத்தமுள்ள 20 அரசு கல்லூரி களில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மொத் தம் 2,655 இடங்கள் உள்ளன. இவற் றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடும். எஞ்சிய 2,257 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இவை தவிர, 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 780 இடங்கள் கிடைக்கும்.

இதேபோல், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி யில் உள்ள 100 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு (15 இடங் கள்) போக எஞ்சிய 85 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். மேலும், 23 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,432 இடங்கள் கிடைக்கும். முதல் கட்ட கலந்தாய்வின்போது அரசு கல்லூரிகளில் உள்ள இடங்களும் 2-வது கட்ட கலந்தாய்வின்போது அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும் இடங்களும் நிரப்பப்படும்.

இவ்வாறு டாக்டர் கீதாலட்சுமி கூறினார்.

பேட்டியின் போது மருத்துவ தேர் வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் மற்றும் மருத்துவ இயக்கக அதிகாரிகள் உடனிருந்தனர்.

‘ரேண்டம் எண்’ என்றால் என்ன?

மருத்துவப் படிப்புக்கு விண்ணப் பிக்கும் மாணவர்களுக்கு கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யப்படும் 10 இலக்க எண்தான் ‘ரேண்டம் எண்’ என்று அழைக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் பட்சத்தில் கலந்தாய்வின்போது யாரை முதலில் அழைப்பது? என்ற பிரச்சினை வரும். அந்த நேரத்தில் முதலில் மாணவர்களின் உயிரியல் மதிப்பெண் பார்க்கப்படும். அதுவும் ஒன்றாக இருந்தால் வேதியியல் மதிப்பெண்ணும் அதைத் தொடர்ந்து கணக்கு மதிப்பெண் ணும் பார்க்கப்படும்.

ஒருவேளை அதுவும் சமமாக இருந்தால் பிறந்த தேதியை கணக் கில் எடுப்பார்கள். சிலநேரம் அதுவும் ஒன்று போல் இருந்தால் கடைசியாக 5-வது வாய்ப்பாக ரேண்டம் எண் ணுக்கு வருவார்கள். எந்த மாண வரின் ரேண்டம் எண்ணும் ஒன்று போல் இருக்காது. எனவே, யாரு டைய ரேண்டம் எண்ணின் மதிப்பு குறைவாக இருக்கிறதோ அந்த மாணவருக்கு கலந்தாய்வில் முன்னுரிமை அளிப்பார்கள். (பொறியியல் கலந்தாய்வில் இதற்கு நேர் மாறாக யாருடைய ரேண்டம் எண்ணின் மதிப்பு அதிகமாக உள்ளதோ அந்த மாணவருக்கே கலந்தாய்வின்போது முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது) கடந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வின்போது 68 மாணவர்களுக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT