தமிழகம்

தற்கொலை முயற்சிகளால் சென்னையில் பரபரப்பு

செய்திப்பிரிவு

தங்களது வீட்டை ஒருவர் அபகரித்துவிட்டதாகக் கூறி சென்னை தலைமைச் செயலகத்தில் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற நபரை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கே.ராதாகிருஷ்ணன். அவரது தாய் சாரதா, தந்தை காசிநாதன். அவர்கள் மூவரும் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நுழைய முயன்றனர். அவர்களின் கையில் மண்ணெண்ணெய் கேன் இருந்ததைக் கண்ட போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, தங்களது நிலத்தை சிலர் அபகரித்துவிட்டதாகவும், பல முறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினர். இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை போலீஸார் பறிமுதல் செய்து ராதாகிருஷ்ணனை மட்டும் புகார் கொடுக்க தலைமைச் செயலகத்தின் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

பின்னர் அவர் முதல்வர் தனிப்பிரிவில் தனது புகார் மனுவை அளித்தார். அது பற்றி அங்கிருந்த செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கடலூர் மாவட்டம் நத்தமேடு கிராமத்தில் நாங்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த வீட்டை சிலர், இடித்துவிட்டார்கள். நீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறி போலி ஆணையைக் காட்டி இச்செயலை அவர்கள் செய்தனர். அதைத் தொடர்ந்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், போலீஸார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. பல முறை புகார் அளித்தும், காவல் கண்காணிப்பாளர் வரை சென்றும் பலன் இல்லை. முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்காகத்தான் இங்கு வந்தோம். எங்கள் இடத்தைத் திருப்பித் தராவிட்டால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

கமிஷனர் அலுவலகம் முன்பு சென்னை ராயப்பேட்டை அங்கமுத்து பாரதி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (39). இவரது மனைவி கவிதா (37). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்கின்றனர். இந்நிலையில் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் கணவர் மீது கவிதா புகார் கொடுத்தார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கவிதா, அவரது தாய் வசந்தா, மாமா சந்துரு ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். ஒரு பாட்டிலில் கொண்டுவரப்பட்ட மண்ணெண்ணெயை திடீரென 3 பேரும் தங்கள் உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றனர். அதற்குள் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

கவிதா நிருபர்களிடம் கூறும்போது, "செந்தில்குமார் வங்கியில் வேலை பார்ப்பதாக கூறி திருமணத்தின்போது 60 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருட்களை வரதட்சணையாக வாங்கிக் கொண்டார். ஆனால் அவர் வங்கியில் வேலை செய்யவில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. இது குறித்து கேட்டால் என்னை அடித்து துன்புறுத்துகிறார். மோசடி செய்து என்னை திருமணம் செய்த அவர் மீதும், அவரது குடும்பத்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதால்தான் தற்கொலைக்கு முயற்சி செய்தோம்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

கவிதாவின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு கூடுதல் ஆணையர் நல்லசிவம் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT