மர்ம நபர்கள் சிலர் தன்னை செல்போனில் மிரட்டுவதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கவிஞர் தாமரை புகார் கொடுத்துள்ளார்.
கவிஞர் தாமரை திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் தியாகு தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாக கூறி அவரது வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் நேற்று காலை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மர்ம நபர்கள் சிலர் எனது வீட்டை அடிக்கடி சுற்றி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நான் வீட்டுக்குள் இருக்கும்போது யாரோ சிலர் கதவை வெளிப்பக்கமாக பூட்டி சென்று விட்டனர். நான் காவல் துறையினருக்கு செல்போனில் தகவல் கொடுத்தபிறகு அவர்கள் வந்து என்னை மீட்டனர்.
எனது செல்போனுக்கு அடிக்கடி மர்ம நபர்களிடம் இருந்து மிரட்டல் போன்கள் வருகின்றன. சிலர் செல்போனில் ஆபாசமாக பேசுகின்றனர். இதில் மிகவும் தரக்குறைவாக பேசிய 3 பேர் குறித்து அவர்களின் செல்போன் எண்ணுடன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். மேலும் சிலர் பேஸ்புக் மூலம் ஆபாசமாக பேசுகின்றனர். அவர்கள் குறித்தும் புகார் கொடுத்திருக்கிறேன். நான் கணவரை பிரிந்து தனியாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டு இப்படி பேசுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.