தமிழகத்தில் குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, கேரள மற்றும் கர்நாடக எல்லையான நீலகிரி மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டம் தாளவாடி ஆகிய பகுதியில் உள்ள 10 கிராமங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக, கிராம மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் இருந்து “குரங்கு காய்ச்சல்” (Kyasanur Forest Disease) கேரள மாநிலத்துக்குப் பரவியுள்ளது. கேரளத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோயின் தீவிரத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது: குரங்கின் உடலில் இருக்கும் உண்ணி மற்றும் ஒட்டுண்ணி மூலமாக குரங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. குரங்கிடம் இருந்து உண்ணிகளுக்கும், உண்ணிகள் மூலம் குரங்குகளுக்கும் காய்ச்சல் பரவுகிறது. அதேபோல், உண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு காய்ச்சல் பரவுகிறது. ஆனால், மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து தற்போது கேரள மாநிலத்துக்கு குரங்கு காய்ச்சல் பரவியுள்ளது. எனவே, தமிழகத்தில் குரங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக கேரள மற்றும் கர்நாடகத்தின் தமிழக எல்லைகளான நீலகிரி மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படு கின்றன என்றார்.