தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றியமைக் கப்பட்டுள்ளது. மேலும், ரத்து செய்யும் டிக்கெட்களுக்கு 50 சதவீத தொகையை திரும்பி அளிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
முன்கூட்டியே திட்டமிடாத நிலையில் திடீரென பயணம் மேற்கொள்பவர்களுக்கு கைகொடுப்பது தட்கல் டிக்கெட் முறைதான். இதனால், தட்கலில் டிக்கெட் வாங்க கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தட்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே கடந்த மாதம் அறிவித்தது. தட்கல் சிறப்பு ரயில் கட்டணம் ரூ.175 முதல் ரூ.400 வரை கூடுதலாக இருக்கும்.
அதாவது, இரண்டாம் வகுப்பு அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதம், ஏசி பெட்டிகள் உள்ளிட்ட பிற வகுப்புகளுக்கான அடிப்படை கட்டணத்தில் 30 சதவீதம் என கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான டிக்கெட் முன்பதிவுக்கு சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப் படவுள்ளன. இந்த ரயில்களில் சலுகை கட்டணம் கிடையாது. தட்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம் குறைந்தபட்சம் 10 நாட்களாகவும் அதிகபட்சம் 60 நாட்களாகவும் இருக்கும். அதிக தேவையுள்ள குறிப்பிட்ட சில வழித்தடங்களில் தட்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படவுள்ளன.
இந்நிலையில், தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, காலை 10 மணி முதல் 11 மணி வரையில் ஏசி வகுப்புகளுக்கு முன்பதிவு நடக்கும். காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரையில் ஏசி அல்லாத வகுப்பு களுக்கு முன்பதிவு நடக்கும்.
இதுவரையில் தட்கல் முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்தால், எந்த தொகையும் திரும்ப அளிக்கப்படாது. புதிய முறையில் தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதம் வரையில் கட்டணத்தை திரும்ப வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.