சென்னை வடபழனியில் திமுகவினர் நடத்திய இலவச டியூஷனில் படித்து சாதனைப் படைத்த மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டினார்.
வடபழனியில் உள்ள அறிஞர் அண்ணா பொதுநல மன்றம் சார்பில் மு.க.ஸ்டாலின் பெயரில் இலவச பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இலவச டியூஷன், அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன.
இங்கு படித்து 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்த 32 மாணவ, மாணவிகளுக்கு, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டினார். 450-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 9 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம், 400-க்கு மேல் மதிபெண் பெற்ற 8 பேருக்கு தலா ரூ. 7 ஆயிரம், மற்றவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இங்கு படித்து டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த சரண்யாவுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.