காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரே காமராஜர் சாலையில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு, காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் வாகன நிறுத்த இடவசதி இல்லாததால் மாணவிகள் தங்களது மிதிவண்டிகளை பாதுகாப்பற்ற நிலையில் பள்ளியின் முன்பு, காமராஜர் சாலையில் நிறுத்துகின்றனர். மேலும், சில வியாபாரிகள் சுகாதாரமற்ற திண்பண்டங்களை, மிதிவண்டி களின் அருகில் சாலையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதனால், நகரின் முக்கிய சாலையான காமராஜர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாணவிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்களும் அந்த சாலையில் நிறுத்தப்படுவதால் முக்கிய நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், ஷேர் ஆட்டோக்களின் செயல்பாடுகளை கண்காணித்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ரவி கூறியதாவது: ஷேர் ஆட்டோக் களில் விதிமுறைகளுக்கு மாறாக 10 அல்லது அதற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை ஏற்றிச் செல்கின்றனர். போக்குவரத்து போலீஸாரும் இதை கண்டுகொள்வதில்லை. இதனால், ஷேர் ஆட்டோக்கள் பாரம் தாங்காமல் சாலையின் பக்கவாட்டில் சாய்ந்து விபத்தில் சிக்குகின்றன என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நகர் நல அலுவலர் ஜெயச்சந்திரன் கூறியதாவது: பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரத்தில் அமைக்கப்படும் சுகாதாரமற்ற கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரம் பற்றி பெற்றோரும் ஆசிரியர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் கூறும்போது,‘ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களை கண்காணித்து நாள்தோறும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் விதிகளை மீறி அதிக மாணவிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.