சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனநாயகத்தில் தேர்தலில் பங்கேற்பது என்பது ஒரு அரசியல் கட்சியின் தலையாய கடமை.
பொதுவாக இடைத்தேர்தல்கள் அந்தந்த மாநிலங்களில் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கணிக்கின்ற தேர்தலாகவே அமைய வேண்டும்.
ஆனால் அந்த காலக் கட்டங்கள் எல்லாம் மாறி ஆளும் கட்சியே வெற்றி பெறுகின்ற நிலை உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் 2001-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த 22 இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளன என்பதை தேர்தல் முடிவுகள் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
அதனடிப்படையில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிடவில்லை. இந்த நிலைப்பாட்டிலிருந்து மாறுவதற்கான எந்த சூழ்நிலையும் உருவாகவில்லை. இடைத்தேர்தலில் த.மா.கா. பங்கேற்காது என்ற முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.