தமிழகம்

காயாமொழியில் சி.பா. ஆதித்தனார் சிலை திறப்பு

செய்திப்பிரிவு

தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனாரின் சிலை, அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் நேற்று திறக்கப்பட்டது.

திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி கிராமத்தில் சி.பா. ஆதித்தனார் சிலை, பா. இராமச்சந்திர ஆதித்தன் மணிமண்டபம் மற்றும் சிலை ஆகியவற்றின் திறப்பு விழா மற்றும் அஞ்சல் உறை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள பா. இராமச்சந்திர ஆதித்தன் மணிமண்டபத்தை தினத்தந்தி இயக்குநர் சி. பால சுப்பிரமணிய ஆதித்தன் திறந்து வைத்தார்.

பா. இராமச்சந்திர ஆதித்தன் சிலையை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனும், நினைவு திருமண மண்டபத்தை அமைச்சர் ஆர். வைத்திலிங்கமும் திறந்து வைத்தனர்.

காயாமொழியில் நிறுவப்பட் டுள்ள சி.பா. ஆதித்தனார் சிலையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திறந்துவைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழா வில் பா. இராமச்சந்திர ஆதித்தன் நினைவு அஞ்சல் உறையை தென் மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜே. சாருகேசி வெளியிட, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார் எம்எல்ஏ பெற்றுக் கொண்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன், எம்எல்ஏக்கள் சி.த. செல்லபாண்டியன், கடம்பூர் செ. ராஜு, எர்ணாவூர் நாராயணன், சுந்தர்ராஜன், ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், த. வெள்ளையன், விஜிபி சந்தோஷம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.ஹெச். மனோஜ் பாண்டியன், திமுக மாவட்டச் செயலாளர் என். பெரியசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT