தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86. சுலோச்சனா மறைவுக்கு தமிழகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா (அதிமுக பொதுச்செயகாளர்) : ''அதிமுக அமைப்புச் செயலாளரும், கழகத்தின் மூத்த உறுப்பினருமான திருமதி ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத் உடல் நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்த திருமதி சுலோச்சனா சம்பத் பொது வாழ்வில் பெண்கள் பங்குபெறுவதற்கும், சமூகத்தில் பெண்கள் சம உரிமை பெற்றிடவும் உழைத்தவர். என்னுடைய அன்பிற்கும், மதிப்பிற்கும் உரியவராக என்றும் விளங்கியவர். இவர், தனது குடும்ப நலனை விட கழக நலனுக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
கழகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பணியாற்றி வந்த சுலோச்சனா சம்பத் , கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், கழக மகளிர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியதோடு, சமூக நல வாரிய உறுப்பினர், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத் தலைவர், தமிழ் நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத் தலைவர் மற்றும் தமிழ் நாடு பாடநூல் கழகத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பதவிகளிலும் திறம்பட பணியாற்றி அனைவரின் அன்பையும், பாராட்டையும் பெற்றவர்.
சுலோச்சனா சம்பத்தின் இழப்பு அதிமுகவுக்கு பேரிழப்பாகும்.
கழகத்தின் மூத்த முன்னோடி சுலோச்சனா சம்பத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருணாநிதி (திமுக தலைவர்): ''தந்தை பெரியாரின் அண்ணன் மருமகளும், பேரறிஞர் அண்ணாவின் தம்பிமார்களில் ஒருவரும், என் அன்பு நண்பருமான சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத்தின் துணைவியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஈவிகேஎஸ் இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
அண்மைக் காலத்தில் நான் அந்த அம்மையாரைச் சந்திக்கவில்லை என்ற போதிலும், சம்பத் உயிரோடு இருந்த போது திராவிட இயக்க உணர்வோடு அவர்கள் மேற்கொண்ட செயல்பாடுகளையெல்லாம் நான் நன்கறிவேன். அன்னையாரை இழந்து வாடும் இளங்கோவனுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): ''தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவரும், மறைந்த ஈவிகே சம்பத்தின் துணைவியும், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், துயரமும் வேதனையும் அடைந்தேன்.
எனக்கு நன்கு அறிமுகமானவர். அனைவரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் பழகக் கூடியவர். பொதுவாழ்வில் நீண்டகாலம் பணியாற்றி, பெரிய அளவில் எந்தப் பதவியிலும் இல்லாத நிலையிலும் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்வதவர். அவரை இழந்து வாடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சோனியா -ராகுல்: ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத் தலைவர் கோபண்ணா கூறியுள்ளார்.
இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஈவிகே சம்பத்தின் துணைவியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவனின் தாயாருமான லோச்சனா சம்பத் இன்று காலை 8 மணியளவில் லமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.
அதிமுகவில் அமைப்புச் செயலாளராக சுலோச்சனா சம்பத் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தை பெரியார் குடும்பப் பின்னணியில் வளர்க்கப்பட்ட அவர் திராவிட இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்டு தமதுஅரசியல் பாதையை வகுத்துக் கொண்டவர்.
மறைந்த சுலோச்சனா சம்பத்தின் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தங்கள் இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.
86-வது வயதில் மறைந்த அவரை இழந்து வாடும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று கோபண்ணா கூறியுள்ளார்.