தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள அகழியில் தீ பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தை சுற்றி அகழி உள்ளது. அதில் இப்போது தண்ணீர் இல்லை. இதனால் அதில் வளர்ந்திருந்த புற்கள் கருகி விட்டன. மேலும் ஏராளமான குப்பைகளும் அதில் கிடக்கின்றன. இந்நிலையில் நேற்று மாலையில் அகழியில் கருகியிருந்த புற்கள் மற்றும் குப்பையில் திடீரென தீ பிடித்தது.
பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸார் இதைப்பார்த்து உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தலைமைச் செயலகத்திற்குள் உள்ள தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். கூடுதல் நீர் தேவைப்படவே உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. யாரோ அணைக்காமல் போட்ட சிகரெட் துண்டால் தீ பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.