சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக 2 நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, வேலூர், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், எந்நேரமும் கூட்டம் அலைமோதும்.
இந்த ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் உள்ளே மற்றும் வெளியே செல்வதற்காக 4 பாதைகள் உள்ளன. இவற்றில் 2 நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:
சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் பயணிகள் செல்வதற்காக 4 வழிகள் இருந்தன. இதனால், பயணிகள் எளிதாக ரயில் நிலையத்துக்கு வந்து செல்ல முடியும். தற்போது 2 பாதைகள் மூடப்பட்டதால் ரயில் நிலையத்துக்கு வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.
குறிப்பாக, காலை, மாலை வேளை களில் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. வெளியூர் செல்வதற்காக மூட்டை முடிச்சுகளுடன் வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறு பயணிகள் கூறினர்.
இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சில நேரங்களில் சமூக விரோதிகள் ஊடுருவுகின்றனர். அண்மையில் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் சிறுவன் ஒருவன் காணாமல் போய்விட்டான். இதற்குக் காரணம் ரயில் நிலையத்துக்கு பல வழிகள் இருப்பதுதான். இதனால், பயணிகளை கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆவின் பூத் அருகே உள்ள வழியும், பிரதான நுழைவு வாயிலில் உள்ள ஒரு வழியும் அடைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள இரு வழிகளில் மட்டும் பயணிகள் வந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மூலம், ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் அனைவரையும் கண்காணிக்க முடிகிறது’’ என்றார்.