தமாகா தலைவர் ஜி.கே.வாசனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சி' என்ற கருத்தரங்கை ஜூன் 9-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்துகிறது. இதற்காக அதிமுக, திமுக, பாஜக, பாமக தவிர மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு திருமாவளவன் நேரில் அழைப்பு விடுத்து வருகிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோரை சந்தித்து திருமாவள வன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் து.ரவிக்குமாரும் உடனிருந்தார்.பிறகு செய்தியாளர்களிடம் வாசன் கூறியதாவது:
கூட்டணி ஆட்சி என்ற கருத்தை திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். ஜி.கே.மூப்பனார் தனி அணியை உருவாக்கியபோது மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. மக்களும் இதையே விரும்புகின்றனர். இதற்காக விடுதலைச் சிறுத்தைகள் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்.
ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பொதுவாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமாகாவின் நிலைபாட்டை இன்னும் 2 நாளில் அறிவிப்போம் என்றார்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் ஜி.கே.வாசனை நேற்று சந்தித்து தனக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.