சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துள்ளதாலும், நிலத்தடி நீர்மட்டம் இறங்கியதாலும், சென்னையில் லாரி தண்ணீர் விநியோகம் அதிகரித்துள்ளது.
சென்னையின் தினசரி சராசரி குடிநீர் தேவை 1000 மில்லியன் லிட்டர். இதில் சென்னை குடிநீர் வாரியம் குழாய்கள் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் சுமார் 600 மில்லியன் லிட்டர் நீர் வழங்குகிறது. நிலத்தடி நீர் மற்றும் தனியார் லாரிகள் மூலமாகவும் பொதுமக்கள் குடிநீர் பெறுகின்றனர்.
சென்னையில் ஜூன் 1-ம் தேதி முதல் இதுவரை சராசரியாக 20.1 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 65 சதவீதம் குறைவு என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 140 செ.மீ. ஆகும். இந்த ஆண்டில் மழை அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. ஜனவரி முதல் இதுவரை 4 செ.மீ மட்டுமே பெய்துள்ளது.
மேலும், சென்னையில் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பும் வெகுவாக குறைந்துள்ளது. பூண்டி ஏரி 0.086 டிஎம்சி, செங்குன்றம் ஏரி 0.727 டிஎம்சி, செம்பரம்பாக்கத்தில் 0.541 டிஎம்சி என ஒட்டுமொத்தமாக 1.35 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 2.54 டிஎம்சி நீர் இருந்தது. அதில் ஏறக்குறைய பாதி அளவுக்கே தற்போது நீர் இருப்பு இருக்கிறது.
நிலத்தடி நீர் அளவும் கடந்த சில மாதங்களாக குறைந்துகொண்டே வருகிறது. டிசம்பரில் சராசரியாக 3.62 மீட்டர் ஆழத்திலும், ஜனவரியில் 3.71 மீட்டர் ஆழத்திலும் கிடைத்த நிலத்தடி நீர் ஜூனில் 5.63 மீட்டர் ஆழத்துக்கு சென்றுவிட்டது. கடந்த ஆண்டு ஜூனில் சராசரியாக 5.06 மீட்டர் ஆழத்தில் நீர் கிடைத்தது.
இதன் காரணமாக, லாரிகள் மூலம் தண்ணீர் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் வீட்டு உபயோகத்துக்கு 9 ஆயிரம் லிட்டர் லாரி ரூ.600, 6 ஆயிரம் லிட்டர் லாரி ரூ.400 என்ற கட்டணத்தில் குடிநீர் விற்கப்படுகிறது. இந்த வகையில் கடந்த டிசம்பரில் 78.7 கோடி லிட்டர் நீர் விநியோகம் செய்யப்பட்டது. இதில் 23.7 கோடி லிட்டர் நீர் கட்டணத்துக்கு விற்கப்பட்டது. (எஞ்சியவை குடிசைப் பகுதிகள், தண்ணீர் அனுப்ப முடியாத பகுதிகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் கட்டணமின்றி அனுப்புவது).
ஜூன் மாதத்தில் இதுவரை லாரிகள் மூலம் 85.5 கோடி லிட்டர் நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32.7 கோடி லிட்டர் நீர் விற்கப்பட்டுள்ளது.