சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் மேற்கொண்ட ஆய்வு மற்றும் அறிவுறுத்தலின்படி, விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த 5 மாதங்களில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதற்காக, நீர் (மாசு தடுப்பு, கட்டுப்பாடு) சட்டம்-1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு, கட்டுப்பாடு) சட்டம்-1981 ஆகியவற்றின்கீழ் 467 தொழிற்சாலைகள் மீது மூடுதல் மற்றும் மின் இணைப்பை துண்டித்தல் ஆகிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றுதல், அனுமதி பெறாமல் தொழிற்சாலைகளை இயக்குதல், நிர்ணயிக்கப்பட்ட புகை வெளியேற்றம் மற்றும் கழிவுநீர் வெளியேற்ற தரநிலைகளை மீறுதல் ஆகியவை இத்தகைய விதிமீறல்களில் அடங்கும். சுற்றுச்சூழல் சட்டங்களின்படி விதிமுறைகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.