தமிழகம்

உடன்குடி அனல் மின்நிலைய புதிய டெண்டரை திறக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான புதிய ஒப்பந்தப்புள்ளியை திறக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன் புதிய அனல் மின்நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் டெண்டர் கோரியது. அதில், சீன இந்திய கூட்டு நிறுவனமும், பெல் நிறுவனமும் பங்கேற்றது. சீன நிறுவனம் குறைந்த தொகையை குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், தொழில்நுட்ப காரணங்களைக் கூறி அந்த டெண்டரை மின்வாரியம் ரத்து செய்தது. இதை எதிர்த்து, சீன நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், 2-வது டெண்டரை மின்வாரியம் கோரியது. இதில், பெல் நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. இதனிடையே, சீன நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால மனுவில், “உடன்குடி அனல் மின்நிலைய டெண்டர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. எனவே, புதிய டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் இவ்வழக்கை விசாரித்து, இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததுடன், அதுவரை புதிய டெண்டரைத் திறக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT