இளைய தலைமுறையினர் தங்களது வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உரிய சுதந்திரத்தை வழங்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஐஐடியில் இயங்கி வந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் மீதான தடை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நீக்கப்பட்டது.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "ஐ.ஐ.டி. சென்னையில் மீண்டும் "அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டம்" சுதந்திரமான மாணவர் அமைப்பாக செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறேன்.
விவாதங்களுக்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் நமது கல்வி நிறுவனங்கள் போதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஆட்சேபணைக்குரிய கருத்துக்கள் பற்றி விவாதிப்பதற்குக் கூட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும்.
சட்டத்திற்கு உட்பட்டும், கல்வி நிறுவனத்தின் விதிமுறைகளுக்குட்பட்டும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு மாணவர் அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.
நம் நாட்டின் நாளைய எதிர்காலம் இளைய தலைமுறை தான். எனவே அவர்கள் ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கேற்பதற்கும், தங்களது வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உரிய சுதந்திரத்தை நாம் வழங்க வேண்டும் என்பதை இந்த தருணத்தில் வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.