ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 11 மணியளவில் முடிவு தெரியவரும்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி நடந்தது. இதில் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகின. 181-வது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் குழப்பம் ஏற்பட்டதால், அங்கு மட்டும் நேற்று மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ராணி மேரி கல்லூரியில் வைக்கப் பட்டுள்ளன. அங்கு துணை ராணுவத் தினரும் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரகசிய கேமராக்கள் மூலமும் அந்த அறை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக 14 மேஜைகள் அமைக் கப்பட்டுள்ளன. முதலில் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு, தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின், மின்னணு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறும்போது, ‘‘வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப் படும். காலை 11 மணியளவில் முடிவு தெரிந்துவிடும்’’ என்றார்.
வாக்குகளை எண்ண ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு மைக்ரோ அப்சர்வர் (நுண் பார்வையாளர்) நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் 45 அலுவலர்கள் மற்றும் மைக்ரோ அப்சர்வர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.