தமிழகம்

சைதை காரணீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சென்னையில் உள்ள பழமையான கோயில்களிலும் சைதாப்பேட்டை சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். முக்கியமான சைவத்தலங்களில் ஒன்றான காரணீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கின. திருப்பணி முடிவுற்ற நிலையில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

மூலவர் சன்னதிக்கு காலை 9.10 மணியளவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சொர்ணாம்பிகை, சிவசுப்ரமணியர், விநாயகர், வேதகிரீஸ்வரர், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், வீரபத்ரர் ஆகிய கடவுள்களின் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டன.

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்றைய தினம் நாள் முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் நடத்தப்பட்டன. மாலையில் திருக்கல்யாண உற்சவத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதனால் சைதாப்பேட்டை முழுவதும் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.செந்தமிழன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலரும் காரணீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT