கதிர்வீச்சுத் தன்மையுள்ள கனிமங்கள் அதிக அளவில் காணப்படும் கன்னியாகுமரி கடற்கரையோர கிராமங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புற்றுநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பிரகாஷ் கூறும்போது, “கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கதிர்வீச்சு கனிமமான மோனோசைட் படிவுகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக மணவாளக்குறிச்சியின் கிழக்கு கடற்கரையோரமாக கடியப்பட்டிணம் கழிமுக பகுதிகளில் மோனோசைட் அதிக அளவில் காணப்படுகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படும் இந்த கனிமங்கள் இயற்கை மாற்றங்களால் பாறைகள் உடைந்து தாதுக்கள் மண்ணோடு கலந்து ஆறுகள் வழியே கழிமுகங்களை வந்தடைகின்றன. இவை கடல் அலைகளால் இழுத்துச் செல்லப் பட்டு குமரி கடற்கரையோர மணல்களில் பரவலாக உள்ளது.
குறிப்பாக சின்னவிளை, கடியப்பட்டிணம் கிராமங்களில் கதிரியக்கங்களின் அடர்த்தி அதிகமாக காணப்படுகிறது. இது, மற்ற மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளில் உள்ள மோனோசைட்டால் உருவாகும் கதிரியக்கத்தை விட 40 மடங்கு அதிகமாகும்.
காமா கதிர் களை வெளியிடும் இந்த மோனோசைட் கனிமங்கள் காரணமாக கடற்கரையோர கிராம மக்களுக்கு மனவளர்ச்சி குறைபாடு, புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. குமரி மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகள் இல்லாததால், அந்நோயால் பாதிக்கப்பட்டோர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளும் நிலையுள்ளது.
புற்றுநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மையங்களை குமரி மாவட்ட கடற்கரையோரக் கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் கடற்கரை கிராம மக்களிடையே அவ்வப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப் படுத்த முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.